இது என்ன சோதனை? பாரதியார் கவிதைகள் உன்னுடைய மனம் கவர்ந்த வரிகள் அப்படின்னா என்னன்னு எடுக்குறது? என்னத்தன்னு விடறது? ஒரு தட்டு நிறைய 20 30 வகை ஸ்வீட்ஸ் வச்சு என்ன இதுல எது உனக்கு வேணாம் ஒண்ணே உன்னை மட்டும் எடு என்று சொல்கிற மாதிரி இருக்கு. இருந்தாலும் சொல்றேன்.
சந்தத்துக்கு அழகுணர்ச்சிக்கு கவிஇன்பத்துக்கு உவமைக்கு சிந்தனைக்கு அறிவுக்கு ஞானத்துக்கு அப்படின்னு எத்தனை வகைப்படுத்தி பார்த்தாலும் அத்தனைக்கும் நிறைய கவிதைகள் இருக்கு. ஆனால் என் உணர்வை தொட்டது அடியாழத்தில் போய் பாதித்தது அவர் பாவனையில் பாடிய 24ல் ஒன்று. கடைசிக்கு முதல் பாவனை கண்ணன் என் ஆண்டான்.
இறைவனை என்ன என்னவோ உறவுமுறையில் எல்லோரும் பாவனை செய்திருக்கிறார்கள். மரபுப்படி நாலு பாவனைகள். தாசமார்க்கம் சற்புத்திர மார்க்கம் சகமார்க்கம் சன்மார்க்கம் அப்படின்னு சைவ நெறியில் அவரவர் உறையும் படி நிலைக்கு தக்கவாறு. இதுல ஒவ்வொரு பாவனைகளையும் பல பெரியவங்க பாடி இருக்காங்க. பாரதியார் அதையும் தவிர வேற எத்தனையோ பாவங்கள் ஒரு அம்மாவா அரசனா ஒரு குழந்தையா அப்பாவா நண்பனா அரசனா காதலியா காதலனா வேலைக்காரனா
இப்படின்னு 24 பாவனைகளில் எனக்கு மிகவும் பிடித்த என்னைத் தொட்ட என்னை ஈர்த்த பாவனை இறைவனை ஒரு ஆண்டகையாக பாவிப்பது. பெருமான் ஆண்டகைன்னா நான் கொத்தடிமை. துளியும் பக்தியோ ஞானமோ இல்லாத காட்டுமிராண்டியாக அலைஞ்சிட்டு இருந்த சமயத்துல ஏதோ தமிழ் படிக்கலாம்னு ஆசையில பாரதியார் நல்லா ஈஸியா பாட்டெழுதி இருப்பார்னு உள்ளே போய் இதுல விழுந்துட்டேன். பெரிய பெரிய மலையெல்லாம் தூள் தூளாகுது நான் எந்த மூலைக்கு. வெறும் புஸ்தகத்துல கட்டுன மண் சுவர் தானே இது. எல்லாம் தூள் தூளாகிக் கரைஞ்சு போச்சு. மத்த மத்த பாவனையெல்லாம் நல்லாருக்கும். சரி யாரோ யாரையோ பாத்து பாடுறாங்கன்னு தோணும். காதல் பாசம் நட்பு அது இதுன்னு என்னமோல்லாம் நமக்கென்ன வெளங்குச்சு? இந்த வரிகள் நானே சொல்றது போல ஒரு உணர்வு.
வைணவ நெறியிலே முத்திரை வாங்குறது, அப்புறம் சன்னியாசம் வாங்குவது ஒரு நிலை அதற்கு அடுத்த கடைசி நிலை பரண்யாசம்.நான் என்ன கண்டேன் இதல்லாம் அப்புறமா தெரிஞ்சுக்கிட்டது. அதாவது முழு சரணாகதி. இதான் அந்த வரிகள். ஒரு காட்டுமிராண்டியை மண்டியிட வைத்த சொற்கள்.
தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்
தவித்துத் தடுமாறி,
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,
பார முனக் காண்டே!
ஆண்டே! - பாரமுனக் காண்டே!
துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்
சுகமருளல் வேண்டும்;
அன்புடன் நின்புகழ் பாடிக்குதித்து நின்
ஆணை வழி நடப்பேன்;
ஆண்டே! - ஆணைவழி நடப்பேன்.
சேரி முழுதும் பறையடித் தேயருட்
சீர்த்திகள் பாடிடுவேன்;
பேரிகை கொட்டித் திசைக ளதிர நின்
பெயர் முழக்கிடுவேன்;
ஆண்டே! - பெயர் முழக்கிடுவேன்.
பண்ணைப் பறையர் தங் கூட்டத்தி லேயிவன்
பாக்கிய மோங்கி விட்டான்;
கண்ண னடிமை யிவனெனுங் கீர்த்தியில்
காதலுற் றிங்கு வந்தேன்;
ஆண்டே! - காதலுற் றிங்குவந்தேன்.
காடு கழனிகள் காத்திடுவேன், நின்றன்
காலிகள் மேய்த்திடுவேன்;
பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்
பக்குவஞ் சொல்லாண்டே!
ஆண்டே! - பக்குவஞ் சொல்லாண்டே!
தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லிச்
சோதனை போடாண்டே!
காட்டு மழைக்குறி தப்பிச் சொன்னா லெனைக்
கட்டியடி யாண்டே!
ஆண்டே! - கட்டியடி யாண்டே!
பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்
பிழைத்திட வேண்டுமையே!
அண்டை யயலுக்கென் னாலுப காரங்கள்
ஆகிட வேண்டுமையே!
உபகாரங்கள் - ஆகிட வேண்டுமையே!
மானத்தைக் காக்கவோர் நாலுமுழத்துணி
வாங்கித் தரவேணும்!
தானத்துக்குச் சில வேட்டிகள் வாங்கித்
தரவுங் கடனாண்டே!
சில வேட்டி - தரவுங் கடனாண்டே.
ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி
யொருசில பேய்கள் வந்தே
துன்பப் படுத்துது மந்திரஞ் செய்து
தொலைத்திட வேண்டுமையே!
பகையாவுந் - தொலைத்திட வேண்டுமையே!
பேயும் பிசாசுந் திருடரு மென்றன்
பெயரினைக் கேட்டளவில்,
வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்க
வழி செய்ய வேண்டுமையே!
தொல்லைதீரும் - வழிசெய்ய வேண்டுமையே!
ஒன்றும் தெரியாதவனை ஆட்கொண்டது இந்த மந்திரச் சொற்கள். உள்ளே புளகமுற பூரிக்க வைத்ததால் இக்கவியே எனக்கு அதீதம்.